செவத்தப் பிள்ளை
பெரிய கடல் ஒன்று இருந்தது. அதில்தான் மனிதர்கள் வாழ்ந்தார்கள். மனிதர்கள் எல்லோரும் சிறு , சிறு தீவுகளைக் கட்டமைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். ஒரு தீவில் ஓர் அம்மா , ஓர் அப்பா மற்றும் அவர்களின் குழந்தைகள் இவ்வளவு பேர்தான் இருப்பார்கள். பெரும்பாலும் நிறையத் தீவுகளில் அம்மாவும் , அப்பாவும் ஒரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுவதில்லை. பெரிய தீவாகக் கட்டமைக்கும் திறன் கொண்டவர்கள் வேண்டுமானால் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வளர்ப்பார்கள். தீவில் வாழ்பவர்களின் பொதுவான பணி மீன் பிடிப்பதுதான். இந்த தீவுகள் எல்லாமே நகரும் தன்மை கொண்டவை, இந்த கடல் முழுவதும் தீவுகளை நகர்த்திச் சென்று மீன் பிடிப்பார்கள் இந்த மக்கள். ஒரு தீவு குடும்பத்தில் ஒரு மகனோ அல்லது மகளோ பெரியவர்கள் ஆகிவிட்டால், அடுத்த தீவு குடும்பத்தில் இருக்கும் மகளையோ அல்லது மகனையோ கட்டி வைத்து, ஒரு புதிய தீவை இரண்டு குடும்பங்களும் சேர்த்து கட்டிக் கொடுத்து புதிய அப்பா, அம்மாவை உருவாக்கி விடுவார்கள். இப்படித்தான் இந்த கடலில் புதிய குடும்பங்கள் உருவாகின்றன.
கடலில் சிறு, சிறு மண் குன்றுகள் இருக்கும் , அதில் வித்தியாசமான இலைகளைக் கொண்ட மரங்கள் இருக்கும். அந்த மரங்களை முறையாக வெட்டி மிக நேர்த்தியாகத் தீவுகளைக் கட்டுவார்கள் இந்த மக்கள். வீடு கட்டுவதற்குத் திமிங்கிலங்களின் எலும்புகளையும் , மரங்களின் கிளைகளையும் பயன்படுத்துவார்கள். வீட்டின் கூரையாகத் திமிங்கிலங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.சில கடல் பாசிகளை முறையாக உலர்த்தி தீவின் மேல் பகுதியை உருவாக்குவார்கள்.
செவத்த பிள்ளையும் , கறுத்த பையனும் புதிதாகக் கட்டி கொண்ட தம்பதிகள். இவர்களுக்கு ஒரு சிறு தீவை இவர்களின் தாய் , தந்தையர் கட்டிக் கொடுத்து விட்டார்கள். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார்கள் இருவரும்.
கிழக்கே கதிரவன் எட்டிப் பார்க்கும் நேரம் மீன் பிடிக்கத் தொடங்கிவிடுவான் கறுத்த பையன். மீன் பிடிப்பதில் கறுத்த பையன் கில்லாடி. செவத்தப் பிள்ளை காலை உணவு தயாரிப்புகளை முடித்துவிட்டு , சிறு பரிசல் ஒன்றை எடுத்துக் கொண்டு உண்ணத் தகுதியான பாசிகளைச் சேகரிக்கப் போய்விடுவாள்.
கடல் நாய் தோல்களில் செய்யப்பட்ட வழவழப்பான மேல் சட்டை வாங்கவோ அல்லது இன்னும் பிற கடல் வாழ் உயிரினங்களின் தோல்களில் செய்யப்பட்ட கால் சட்டை வாங்கவோ அல்லது அரிதாகக் கிடைக்கக் கூடிய கிழங்குகளை வாங்கவோ பிடித்த மீனில் பெரும் பகுதியை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும். அதனாலே கறுத்த பையன் எப்போதும் மீன் பிடிப்பதிலேயே கவனமாக இருப்பான். வெறும் மீன்களை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தால் போதாத என்று அவனுக்குத் தோன்றும் ,ஆனால் அருகில் இருக்கும் குடும்பத்தார்கள்
இது போன்ற ஆடம்பரங்களில் இருக்கும் போது , நாம் மட்டும் குறைவாக வாழ முடியுமா என்ன? என்று கறுத்த பையன் வேலையில் ஆழமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவான்.
காலையும் , மதியமும் உணவு நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் மீன் பிடிப்பதிலேயே கவனமாக இருப்பான் கறுத்த பையன். செவத்தப் பிள்ளை கடற்பாசிகளைச் சேகரித்து விட்டு , அவற்றை உலர்த்தி விட்டு, கொஞ்சம் இளைப்பாற நினைப்பாள். தன் துணைவனிடம் வந்து " ஏங்க , எந்த நேரமும் வேலையாகவே இருக்கிறீர்களே , என்னோடு வாருங்களேன் அங்கே ஒரு மண் குன்று இருக்கிறது. அதில் ஒரு மரமும் இருக்கிறது. அதன் அடியில் அமர்ந்து ஏதாவது பேசி இருந்துவிட்டு வரலாம்" என்று கேட்பாள்.
" அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நீ வேண்டுமானால் போய்விட்டு வா" என்று சீறுவான் கறுத்த பையன்.
தன் துணையின் போக்கை அறிந்த அவள், தான் மட்டும் பரிசலை எடுத்துக்கொண்டு அந்த மண் குன்றிற்குப் போய் இளைப்பாறுவாள். இவளைப் போலவே ஒரு சில ஆண்களும் , பெண்களும் அங்கே வருவார்கள் சிரித்துப் பேசி மகிழ்ந்து இருப்பார்கள்.இதை எல்லாம் பார்க்கும் செவத்தப் பிள்ளை மன ஏக்கம் அடைவாள். இது போலப் பல முறை இந்த மண் குன்றுக்கு வந்து போயிருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட கறுத்த பையன் அவளுடன் வந்ததில்லை.
ஒரு முறை அந்த குன்றில் செவத்தப் பிள்ளை இருக்கும்போது ஒருவன் அவளிடம் வந்து பேசினான்.
" நீங்க யார் ? நான் உங்களைப் பல முறை இங்கே பார்த்துள்ளோனே. நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? " என்று அவன் கேட்டான்.
" நான் தனியாக இல்லை, எனக்குத் துணைவர் இருக்கிறார். அவர் இன்று என்னோடு வரவில்லை " என்று அவனிடம் பேச்சை முறிக்க முயன்றாள்.
"பொய் சொல்லாதீர்கள், நீங்கள் எப்போதும் தனியாகத்தான் வருகிறீர்கள். நான் , நீங்கள் வரும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன்." என்றான் அவன்.
" அவருக்கு இங்கே வரப் பிடிக்கவில்லை அவ்வளவு தான் . நான் போக வேண்டும் " என்று எழுந்து நடக்க முயன்றாள் செவத்தப் பிள்ளை.
" நான் உங்களை ஒன்று செய்ய மாட்டேன். எனக்குத் துணை கிடையாது. அதனால் யாரிடமாவது பேச்சுக் கொடுக்கலாம் என்று உங்களிடம் பேச்சுக் கொடுத்தேன் அவ்வளவு தான். போய்விட்டு வாருங்கள் " என்று சிரித்த முகத்துடன் சொன்னான்.
அவன் கொஞ்சம் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியவன்தான் என்பதை செவத்தப் பிள்ளை உணர்ந்தாள்.
அவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் பரிசலில் ஏறிவந்து விட்டாள். கிட்டத்தட்ட ஒரு மாதக் கணக்காக அவள் அந்த குன்றிற்குப் போகவில்லை. அந்த குன்றிலிருக்கும் மரத்தடியில் அமர்வது தனி சுகம். அந்த மரத்தடியில் மண்ணை கையில் அள்ளி தூற்றி அதன் ஈரப்பதமற்ற தன்மையை உணர்வதில் செவத்தப் பிள்ளைக்கு மிக விருப்பம். அதனால் மீண்டும் போகலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். தன் துணைவனை அழைத்தாள். கறுத்த பையன் எப்போதும் மீன்களுடனே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். அவன் இந்த முறையும் வர மறுத்துவிட்டான்.
செவத்தப் பிள்ளை மட்டும் பரிசலை எடுத்துக்கொண்டு அங்கே போனாள். மரத்தடியில் அமர்ந்து மண்ணை கைகளால் அள்ளி தூற்றினாள். அப்போது போன முறை இவளிடம் பேச்சு கொடுத்த அவன் வந்தான்.
" திரும்ப வர மாட்டீர்கள் என்று நினைத்தேன் " என்று பற்கள் தெரியப் புன்னகை செய்தான்.
அவள் அவனுக்கு மறு பேச்சுக் கொடுக்காமல் மண்ணை ஒரு கையால் கிண்டினாள்.
" நீங்கள் ஒன்று பேச வேண்டாம். ஆனால் எனக்குப் பயந்து இங்கே வருவதை நிறுத்தாதீர்கள். இந்த இடம் அழகானது . நான் உங்களை தொல்லை செய்யப் பிரியப்படவில்லை நான் போகிறேன் " என்று அவன் வந்த பரிசலில் ஏறிப் போய்விட்டான்.
அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சிறு நேரம் அங்கே இருந்து விட்டு தன் தீவுக்குத் திரும்பிவிட்டாள் செவத்தப் பிள்ளை. அவளுடைய மனதில் அவளிடம் பேச்சுக் கொடுத்தவனின் முகம் பதிவாகியிருந்தது. எப்படியோ அவள் மனம் , அவனுடன் இனம்புரியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது.
அடுத்த முறை அந்த குன்றிற்கு அவள் போனாள். இந்த முறை அவன் வருவானா என்று அவள் மனம் எதிர்பார்த்தது. அவன் வரவில்லை. அப்போது அங்கே ஓர் ஆணும், பெண்ணும் கூடிப் பேசி அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அவனைக் குறித்து விசாரிக்க நினைத்தாள் செவத்தப் பிள்ளை.
அவர்களை நெருங்கிப் போனாள்.
" உங்களிடம் ஒன்று கேட்கப் பிரியப்படுகிறேன்" என்றாள் செவத்தப் பிள்ளை.
" கேளுங்கள் " என்றான் அங்கிருந்த ஆண்.
இவள் , அவனின் அங்க அடையாளங்களைச் சொல்லி " அவர் எங்கிருந்து வருகிறார் ? " என்று கேட்டாள்.
" அவனா? இந்த பக்கமாகப் போனால் ஒரு மண் குன்று இருக்கிறது. அதில் ஒரு குடிசை போட்டு வாழ்ந்து வருகிறான். அவன் யாரென்று தெரியவில்லை. இந்த ஒரு வருடமாகத்தான் இந்த பக்கம் சுற்றுகிறான். இந்த குன்றிற்கு அடிக்கடி வருவான். இந்த இரண்டு வாரமாக இந்த பக்கம் வருவதில்லை. ஏனென்று தெரியவில்லை" என்று அந்த ஆண் இவளிடம் சொல்லிவிட்டு அவனுடன் இருந்த பெண்ணுடன் பேசி , சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
செவத்தப் பிள்ளைக்கு மனதில் ஓர் உறுத்தல். தன்னால்தான் அவன் இங்கே வருவதில்லையோ ? என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணமாக தன் தீவுக்குத் திரும்பப் பரிசலை எடுத்தாள் செவத்தப் பிள்ளை.
அவளுடைய எண்ணத்தில் ஒரு மாற்றம் பரிசலைத் திருப்பினாள். அவன் இருப்பதாக அந்த ஆண் குறிப்பிட்ட திசையில் பரிசலைச் செலுத்தினாள். வெகுநேரம் பரிசல் வலிந்தாள். திரும்பி தன் தீவுக்கே போய்விடலாமா ? என்று கூட அவள் மனம் மாறியது. இருந்தது அவள் அப்படிச் செய்ய வில்லை.
தூரத்தில் ஒரு சிறு மண் குன்று தெரிந்தது . அதை நோக்கி பரிசலைச் செலுத்தினாள் செவத்தப் பிள்ளை. அவள் அதை நெருங்கும் போது அதிலிருந்து சிறு குடிசை அவளுக்குத் தென்பட்டது. குன்றில் பரிசலை இழுத்துவிட்டு அந்த குடிசையை நோக்கி நடந்தாள். குடிசையின் முன்பக்கம் அடைத்திருந்தது. உள்ளே யாரோ முனங்கும் ஒலி கேட்டது. அடைப்பை நீக்கி உள்ளே பார்த்தாள் செவத்தப் பிள்ளை. அவன் ஒரு கல் மீது குறுகிய நிலையில் நடுங்கியபடி படுத்திருந்தான். இவள் உள்ளே போனாள். இவளைப் பார்த்து வேதனையுடன் சிரித்தான் அவன்.
" என்னைத் தேடி வந்தீர்களா? நான் தனியாகச் செத்துப் போவேன் என்று நினைத்தேன்" என்று நடுங்கிக் கொண்டு சொன்னான்.
" உனக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள்.
" எனக்கு ஏதோ நோய் இருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து கிடையாதாம். எனக்கு வைத்தியம் பார்த்தவர் சீக்கிரம் இறந்துவிடுவேன் என்று சொன்னார்" என்று சொன்னான் அவன்.
" நீ எங்கே இருந்து வந்து இங்கே இருக்கிறாய்? உனக்கு உறவுகள் இல்லையா? உனக்குத் துணை இல்லையா? " என்றாள் இவள்.
அவன் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வில்லை. அவள் முகத்தை ஒரு குழந்தை பார்ப்பது போலப் பார்த்தான். " அம்மா , உன் கைகளைத் தொட்டு பார்க்கட்டுமா?" என்று கேட்டான்.
அவள் தயங்கி நின்றாள். " இது தொற்று நோய் அல்ல" என்றான் அவன்.
அவள் கைகளை நீட்டினாள். தெய்வத்தின் கைகளைப் பாவி ஒருவன் பயபக்தியுடன் தீண்டுவது போல மெல்ல அவள் கைகளை , தன் கைகளால் ஏந்தினான். " என் அம்மாவின் கைகளும் இப்படி தான் இருந்திருக்கும் " என்று அவள் கைகளைக் கன்னத்துடன் ஒற்றிக் கொண்டான்.
அவன் படுத்திருந்த கல்லின் அருகில் அவள் அமர்ந்து கொண்டாள். அவன் அழுதான். ஒரு குழந்தை போல் அழுதான். " அம்மா , அம்மா " தேம்பித் தேம்பி அழுதான். செவத்தப் பிள்ளை பரிதாபமாகப் பார்த்தாள். அது அவனுக்கு அவள் கருணையுடன் பார்ப்பது போலத் தெரிந்தது.
" உனக்கு என் மீது கருணை உண்டா அம்மா? " அவளைப் பார்த்துக் கேட்டான்.
" நான் உன் அம்மா அல்ல" என்றாள் செவத்தப் பிள்ளை.
" அப்புறம் ஏன் என்னைத் தேடி வந்தாய்? நீ ஒரு பெண்தானே. பெண்தானே எப்போதும் அம்மா" என்றான்.
" ஆமாம், பெண்தான் எப்போதும் அம்மா. இந்த உலகத்தில் இருக்கும் எல்லா அம்மாக்களுக்கும் உன் மீது கருணை உண்டு. எனக்கும் உன்மீது கருணை உண்டு " என்று அவனைச் சமாதானம் செய்தாள். தன்னை அறியாமல் அவன் தலையைக் கோதினாள்.
வெகு நேரம் அவளைப் பார்த்தபடியே இருந்தான். இரவு வந்துவிட்டது.
" நான் போகவேண்டும் " என்றாள் செவத்தப் பிள்ளை.
அவன் சரி என்பது போல் தலை அசைத்தான். அவன் முகத்தில் சோகம் படர்ந்தது. மெல்ல வெளியே வந்தாள். எங்கும் இருட்டு நிறைந்து கிடந்தது. மீண்டும் குடிசைக்குள் போனாள். உள்ளே ஒரு விளக்கைத் தேடி எடுத்தாள். அதற்கு ஒளியூட்டினாள்.
" அம்மா , நீ போக வில்லையா? என்று கேட்டான்.
" இல்லை" என்று மீண்டும் அவன் தலையைக் கோதினாள்.
வெகுநேரம் விழித்துக்கொண்டிருந்த செவத்தப் பிள்ளை எப்போதோ தூங்கிப் போனாள். அவள் கண்விழித்துப் போது அவன் கல்லில் உயிரற்று அமைதியாகக் கண்மூடியிருந்தான். செவத்தப் பிள்ளையின் மனம் வலித்தது. எழுந்து வெளியே வந்தவள் ; அந்த மண் குன்றை நோட்டமிட்டாள். குடிசையின் பின்பக்கம் பெரிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. அவளுக்குப் புரிந்தது. அந்த குழியில் அவனை அடக்கமாக்கினாள். அவளுக்கு அழுகை வந்தது. அவனை யாரென்றே தெரியாது; ஆனால் அவளுக்கு அழுகை வந்தது.
சிறிது நேரம் அங்கே நின்றிருந்தாள். பிறகு பரிசலை எடுத்துக்கொண்டு தன் தீவுக்குத் திரும்பினாள். கறுத்த பையன் வீட்டின் முன் பக்கம் சோகமாக அமர்ந்திருந்தான். இவளைப் பரிசலில் பார்த்ததும் அவனுக்கு முகம் மலர்ந்தது. அவள் பரிசலைக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்தாள்.
" என்னை விட்டு விட்டுப் போய்விட்டாய் என்று நினைத்தேன். என் மேல் கோபம் என்றால் என்னிடம் சொல்" என்று பரிதாபமாகக் கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை. அவள் வீட்டிற்குள் சென்று அவள் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் மீண்டும் பேச முயன்றான்; ஆனால் அவள் பேசவில்லை. கறுத்த பையன் மீன் பிடிக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் " ஏங்க , அந்த குன்றுக்குப் போகலாம் வருகிறீரா?" என்று இன்று பேசாத அவள் இப்போது முதல் முறையாக அவனைப் பார்த்துப் பேசினாள்.
" வருகிறேன் " என்று ஆர்வமாக அவளின் பரிசலில் ஏறிக் கொண்டான். அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான். கடல் மீன்களுடன் சிரித்தது.
முற்றும்.
