புதன், 10 ஆகஸ்ட், 2022

செம்பி (சிறுகதை)

 செம்பி.





மனிதர்கள் 'புவி' உலகை விட்டு வெளியேறிப் பல புதிய உலகங்களிலும்  குடியேறி பல காலங்கள் ஆகின்றன. புவி உலகில் ஒரு மொழி பேசும் இனம் ஒன்று இருந்தது. அந்த இனத்தில் ஒற்றுமை கிடையாது. பிற மொழி இனத்தால் ஆளப்பட்டு , சோற்றிற்கு ஓட்டுரிமையை விற்று கஞ்சிக் குடித்த இனம் அது. இந்த இனத்தைப் பரிதாபத்திற்குரிய இனமாக , தாழ்வு மனப்பான்மை கொண்ட இனமாக வைத்திருப்பதில் பிற மொழி அரசியல் தலைவர்கள் மதி நுட்பம் கொண்டு செயல் பட்டனர்.


புவி உலகைக் காசுக்கு உடைத்துத் தின்ற பிறகு தொழில்நுட்ப உதவிக் கொண்டு வானத்துக் கப்பல் கட்டி மனிதர்கள் புதிய உலகங்களை உடைத்துத் தின்னக் கிளம்பினர். அப்படிக் கிளம்பி மக்களில் இந்த தாழ்வு மனப்பான்மை கொண்ட இனமும் இருந்தது. இந்த முறை பிற மொழி இனத்தவர்களிடம் அடிமை ஆகிவிடக் கூடாது என்று , தூரத்துக் கோளம் ஒன்றில் இந்த இனத்தவர் மட்டும் குடியேறினார். அந்த கோளமே சிவப்பு உலகம் என்று அறியப்பட்டது.


சிவப்பு உலகம் பேச்சு வழக்கில் செவ்வுலகம் என்று அழைக்கப்பட்டது. இந்த உலகத்தின் மண் குருதி சிவப்பாக இருப்பதாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டது. இந்த உலகில் உழவு செய்ய வளமான மண்ணும், ஆறுகளும் இருந்தன. வேட்டையாட இந்த உலகில் உயிர்கள் இருந்தன. வாழ்கையை வெறுத்தவர் துறவு கொள்ள வானத்தைத் தொட நினைக்கும் மலைகளும் இருந்தன. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்ட இனம் இங்கே தங்கள் இனத்தை விருத்தி செய்யத் தொடங்கியது. இப்போது இந்த உலக உயிர்களின் மரபணுவுடன் கலந்து 'தமிழ் சிவப்பு இனம்' என்ற புது பெயருடன் இந்த உலகை ஆண்டு வாழ்ந்து வருகிறது.


இந்த உலகில் இந்த மக்கள் பஞ்சம் என்பதையே பாராது வாழ்ந்தனர். உழவு செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தினர். இந்த இயந்திரங்கள் தண்ணீரில் இயங்கக் கூடியவை; எனவே இந்த உலகைச் சிதைக்க வேண்டிய அவசியம் இந்த மக்களுக்கு இல்லை. மேலும் இயந்திரங்களை உருவாக்கத் தனித் துவமான தனிமங்கள் இந்த உலகில் எளிதாகக் கிடைத்தன. ஒரு இயந்திரம் பழுது ஆகாமல் முந்நூறு , நானூறு ஆண்டு இயங்கும் அளவுக்குத் தரமாகத் தயாரிக்கப்பட்டது. ஏனெனில் இந்த தயாரிப்புகள் எல்லாம் லாப நோக்கம் அற்று ; இந்த உலகுடன் இணைந்து வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டன.


புவி உலகில் பிற இனத்திற்கு அடிமையாக வாழ்ந்ததால் இந்த உலகில் இந்த மக்கள் ஒற்றுமை குலையாது வாழ்ந்தனர். இந்த மக்கள் தங்கள் மொழியை  அறிவின் ஊற்றாக மாற்றிக் கொண்டார்கள். இங்கே மக்கள் பெருக்கம் குறைவாகத்தான் இருந்தது. அதனால் ஒரே ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. மேரு மலை அடிவாரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஐம்பதாயிரம் பேர் படிக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அளவில் உருக்கப்பட்ட பல்கலைக்கழகம் அது.


அருள் தன் வீட்டை விட்டு வெளியே வந்து மேரு மலையை நோக்கி ஒரு பார்வை பார்த்து விட்டு " செம்பி , ஏ பொண்ணு தேவையானத எடுத்துகிட்டியா வா போகலாம்" என்று தன் ஓட்டு வீட்டிலிருந்து வெளியேறும் தன் மகள் செம்பியைப் பார்த்து புன்னை செய்தான். " இளவரசி போல இருக்கிற, என் மகளே" என்று நேர்த்தியான உடையலிருந்த தன் மகளை தன் இருசக்கர எதிர் ஈர்ப்பு வாகனத்தில் தூக்கி அமர்த்தினான். அவளுக்கு ஆறு அகவை இருக்கலாம். 


" அப்பா , நான் உன்னோடே இருக்கிறேன். எனக்குப் படிக்கப் போக பிடிக்கல" என்று சொன்னாள் செம்பி.


" அப்படிச் சொல்லக் கூடாது. படிப்பு மிக முக்கியம் பொண்ணு" என்று சொல்லிக் கொண்டே தன் வண்டியில் ஏறி அமர்ந்து இயக்கினான். அந்த வண்டி மேரு மலையை நோக்கி காற்றில் மிதந்தபடி பயணித்தது.


" ஏன் படிப்பு முக்கியம்?" என்று கேட்டாள் செம்பி.


" ஏனா.... தெளிவாகச் சிந்திக்கவும், பிழையின்றி முடிவு எடுக்கவும், அறிவு வளர்ச்சி பெறவும் படிப்பு மிக முக்கியம்" என்றான் அருள்.


" அப்படினா... நீயே எனக்குப் பாடம் சொல்லிக் கொடு , அப்பா. இதற்காக நான் ஏன் பல்கலைக் கழகத்திற்குப் போகணும்?" என்று கேட்டாள் செம்பி.


" உன் வயது தோழர்களிடம் நட்பு கொண்டு, வருங்காலத்திற்குத் தேவையான சமூக ஒற்றுமையைக் கற்றுக்கொள்ள, நீ பல்கலைக்கழகம் போக வேண்டியது தேவை பொண்ணு" என்று சொன்னான் அருள்.



இதற்கு என்ன மறுப்பு சொல்வது என்று தெரியவில்லை செம்பிக்கு, அவள் அமைதியாகிவிட்டாள். செம்மண் வயல்களில் தானியங்கி இயந்திரங்கள் உழுது கொண்டிருந்தன.  ஈரத்திற்கு அதீத சிவப்பாக மின்னியது செம்மண். இயந்திர கலப்பைகள்  சிவப்பு நிறம் ஏற்றப்பட்ட தேங்காய் மீட்டாயைக் கிளறுவது போலபோலச் செம்மண்ணைப் பிளந்து போட்டன.


இதை எல்லாம் கவனித்தபடியே அப்பனும் , மகளும் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். செம்பி அங்கே படிப்பதற்காகச் சேர்க்கப்பட்டாள். படிப்பு முடியும் வரை இங்கேயே தங்கிப் படிக்க அனைத்து ஏற்பாடுகளையும் இந்த சமூக செய்து வைத்திருந்தது. ஆரம்பத்தில் இங்கே படிப்பது செம்பிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் , போகப் போகச் செம்பி மாறிவிட்டாள். மிக நன்றாகப் படித்தாள். அவளுக்கு இன ஒற்றுமையும் , அறிவு நுட்பங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டன.


செம்பி , தன் அறிவுடன் சேர்த்து வளர்ந்தாள். அவள் படிப்பை முடிக்கும் போது , இந்த சிவப்பு தமிழரசில் முக்கிய பொறுப்புக்கு வந்தாள். இந்த தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான முக்கிய முடிவுகளை எடுக்கும் பதவியிலிருந்தாள் அவள். தன் மகளின் வளர்ச்சியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான் அருள். செம்பிக்கு மணமுடிக்க விரும்பினான் அருள். செம்பி ஆசைப்பட்ட ஒருவனையே மண முடித்து வைத்தான் அருள். நாட்கள் கழியத் தொடங்கின. அருள் வயோதிகத்தை அடைந்திருந்தான். செம்பிக்கு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன. பேரக் குழந்தைகளுடன் நாட்களைக் கழித்தான் அருள். 


இந்த காலத்தில்தான் ஒரு புதிய வானத்துக் கப்பல் இந்த உலகத்தின் விண்வெளிக்கு வந்து சேர்ந்தது. இந்த உலகத்தில் தரையிறங்க அனுமதி கோரியது அந்த கப்பல். அந்த விண் கப்பலிலிருந்த மக்கள் புவியில் தமிழர்கள் இருந்த காலத்தில் தமிழர்களைக் காட்டு மிராண்டிகள் என்று சொல்லி அடக்கி ஆண்ட மக்கள். இப்போது மிகப் பசியுடன் அடைக்கலம் நாடி வந்துள்ளார்கள். இந்த உலகின் தமிழரசு மிகச் செழிப்பாக உள்ளது. இது போன்ற ஆயிரம் கப்பலுக்கு இந்த அரசால் உணவளிக்க முடியும்.


ஆனால் பழைய அனுபவம் தமிழர்களைப் பயமுறுத்தியது. இவர்களைப் பாவம் பார்த்து இந்த உலகில் அனுமதித்தால் மீண்டும்  அவர்கள் அரசியல் அதிகாரத்தின் மூலம் நம்மை அடிமையாக்கி விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தமிழர்களுக்கு வந்தது. இது குறித்து விரைவில் முடிவெடுத்தாக வேண்டும். இதற்கு முடிவு எடுக்க வேண்டியவள் செம்பி. செம்பி குழம்பிப் போனாள்.


தன் அப்பாவிடம் வந்து நின்றாள். " இந்த விடையத்தில் நான் என்ன முடிவெடுப்பது?" என்று கேட்டாள். 


" அவர்களை அனுமதிக்காதே" இதுதான் அருளின் பதில் .


" பசி, பட்டினியோடு வந்திருக்காங்க அப்பா. அவர்களை எப்படித் திருப்பி அனுப்புவது? அது சரியில்லையே. தமிழர் அறம் பிறழ்ந்துவிடுமே" என்றாள் செம்பி.


" புவியில் நம் அறத்தால் வந்தாரை வாழ வைத்தோம். கடைசி வரை அடிமையாக இருந்தோம். கேட்க நாதியற்ற இனமாகக் கொல்லப்பட்டோம். மீண்டும் அது நடக்கும் இவர்களை நீ  இங்கே அனுமதித்தால்" என்று கடுமையாகச் சொன்னார் அருள்.


தன் அப்பாவிற்கு மறு மொழிச் சொல்லாமல் அவள் அங்கிருந்து வெளியேறினாள். 


அடுத்த நாள் செம்பி தன் முடிவை பொது மக்கள் முன் அறிவிக்க வந்தாள். கூடத்தில் அருளும் நின்றான். அவனுடைய பேத்தி அவன் கையை பிடித்திருந்தாள். மேடையில் நின்றபடி அறிவிப்பைச் சொன்னாள் செம்பி " புதிய கப்பல் ஒன்று நம் வானத்தில் நிற்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  அவர்களை தரையிறங்க அனுமதித்தால் , நாம் அவர்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும் . அப்படிச் செய்தால் வருங்காலத்தில் இந்த உலகில் நம் இனம் அழிக்கப்படலாம் அல்லது ஒடுக்கப்படலாம் என்பது இங்கே உள்ள பலரின் கருத்து என்பதையும் நான் அறிவேன்" பேச்சை சில நொடிகள் நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தாள். "  இருந்தும் , பசியோடு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்ப முடியாது. அதனால் தேவையான உணவு பண்டத்தை அவர்களுக்கு அளித்து, அவர்களை இங்கிருந்து போகும்படி செய்யப்போகிறோம். இதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்தன. நாளை மறுநாள் அந்த கப்பல் நம் உலகை விட்டுப் பயணித்துவிடும் " என்று சொன்னாள் செம்பி. பொது மக்கள் மகிழ்ந்தனர் தொடர்ந்து கூட்டம் கலைந்தது. அருள் மன நிம்மதி அடைந்தான். தன் பேத்தியுடன் வீட்டை நோக்கி நடந்தான்.


செம்பியின் உள்ளம் கலக்கத்திலிருந்தது. அவள் இப்போது மக்களிடம் சொன்ன பொய் ஒருநாள் வெளிப்படலாம் என்ற அச்சம் அவளுக்கு அந்த கலகத்தைக் கொடுத்தது. உண்மையில் நடக்கவிருக்கும் விடையமே வேறு என்பதை இந்த மக்கள் அறிய மாட்டார்கள். இந்த தமிழ் அரசின் அதிகார தலைமையிடம் அனுமதி வாங்கியே தன் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறாள் என்பது அவளும் , அதிகார மைய நபர்களும் அறிந்த உண்மை. திட்டம் யாதெனில் அந்த புதிய கப்பல் இந்த உலகத்தின் மறுபக்கம் உள்ள ஒரு தீவில் இறக்கி விடப்பட்டு , அங்கே அந்த மக்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டு அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தமிழ் மக்களுடன் கலந்து விடுவதுதான். 


செம்பி ஒரு சிவப்பு பூ மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். முருகன் அங்கே வந்தான். முருகன் அதிகார மையத்தைச் சேர்ந்த ஒரு நபர். அவனுக்கும் இந்த உண்மை தெரியும். இந்த திட்டத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பெரும்பான்மை அதிகார மையத்தின் நபர்கள் செம்பியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் இவனும் அதற்குக் கட்டுப்பட்டவன் ஆகிறான். 


" உன் திட்டம் ஒரு நாள் வெளிப்படலாம். அன்று நீ இனத் துரோகியாக அறியப்படுவாய்" என்று சொன்னான் முருகன். மெல்லத் திரும்பிப் பார்த்தாள் செம்பி.


" வேறு என்ன செய்யச் சொல்கிறாய்?. அந்த மக்களை எப்படித் திருப்பி அனுப்புவது? அது சரி அல்ல. அது தமிழர் அறம் அல்ல" என்றாள் செம்பி.


" நானும் தமிழன்தான். எனக்கும் அறம் தெரியும். அந்த அறம் எல்லாம் நம் இனத்திற்கு மட்டுமே பொருந்தும். நம் அறத்தைப் பிறர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, நம்மிடம் காட்ட மாட்டார்கள். புவியில் ஆற்றுத் தண்ணீருக்காக நம் இனத்தைத் துரத்தித் துரத்தி சுட்டார்கள் என்பதை மறவாதே" என்றான் முருகன். 


" முருகா, தமிழின கடவுளின் பெயரைத் தாங்கிய நீ இப்படிப் பேசலாமா? அது எல்லாம் முடிந்த கதை. இந்த மக்கள் தமிழராக மாறி வாழ்வார்கள்" என்று உறுதியாகச் சொன்னாள் செம்பி.


முருகன் சிரித்தான். " ஒருநாள் இந்த உலகைவிட்டும் நாம் துரத்தப்படுவோம். அன்று உன் பரம்பரையே நீ இப்போது எடுத்த முடிவிற்கு வருந்தும்" என்றான் முருகன்.


செம்பி , முருகனைப் பார்த்தாள்.  அவன் சொன்னது நடந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கும் இருந்தது. அப்போது பழைய திருக்குறள் ஒன்றை நினைவு படுத்திக் கொண்டாள்.


" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்துவிடல்"


தமிழர் அறமும் , அவளின் அச்சமும் மாறி மாறி அவள் உள்ளத்தை வதைத்தன. முருகன் திரும்பி நடந்தான். அவள் அந்த சிவப்பு நிலத்தை வெறித்துப் பார்த்தாள்.


முற்றும்.



















கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...