செவ்வாய், 20 செப்டம்பர், 2022

தான்தோன்றி கோளம்

 






பெரிய அளவில் விமர்சிக்க முடியாத, எந்த ஒரு குற்றமும் சொல்ல முடியாத நிலம் இது.  இந்த நிலத்தை வெகு காலத்திற்கு முன்பு இந்த மனிதர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த மனிதர்களை இந்த நிலமானது ஏற்றுக்கொண்டு விட்டது என்பதற்குச் சாட்சியாக இங்கே மனிதர்கள் விளைவிக்கும் உணவுப் பண்டங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன. இருந்தபோதிலும் மனிதர்களுக்கு ஓர் அச்சம் இருக்கவே செய்தது. இந்த நிலத்தில் மனிதர்கள் குவியல் குவியலாகப் பார்க்கும் எலும்புக்கூடுகள் இதற்கு முன் இந்த நிலத்தில் உயிர்கள் வாழ்ந்தன என்பதை உணர்த்தக் கூடியதாக இருந்தன. இத்தகைய எலும்புக்கூடுகளுக்குச் சொந்தமான அந்த உயிர்கள் எப்படி இறந்தன? யார் அந்த உயிர்களின் இறப்புக்குக் காரணம்? அல்லது ஏதேனும் நோய் கண்டு அந்த உயிர்கள் இறந்தனவா? என்ற கேள்விகள் இந்த மனிதர்களை அச்சப் படுத்திக் கொண்டே இருந்தன.


மனிதர்களின் அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அதற்குக் காரணம் மனிதர்கள் இங்கே குடியேறி நூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பெரிதாக எதுவும் நிகழ்ந்து விடாது என்று மனிதர்கள் நம்பினார்கள். இதற்கு முன் இருந்த உயிர்கள் எல்லாம் இறந்ததற்குக் காரணமான விஷயம் இப்போது இல்லை என்று நினைத்தார்கள். அதனால் தங்களுக்கும் சிக்கல் இல்லை என்று மனிதர்கள் நம்பினார்கள்.


தாங்கள் பூமியில் செய்தது போலவே இந்த உலகிலும், இந்த நிலத்திலும் புதிய நகரங்களைக் கட்டமைக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள்.


பூமியில் செய்தது போலவே பொருளாதாரம் என்ற மாயை இந்த உலகையும் ஆட்டுவிக்கத் தொடங்கியது.   மனிதர்கள் இந்த உலகத்தின் கனிம வளங்களை மிக வன்முறையாகத் தோண்டி எடுத்தார்கள்.  இது குற்றம் என்றும், இது பிழை என்றும் சொல்லும் மனிதர்களைப் பிற்போக்குவாதிகள் அல்லது முன்னேற்றத்தை அறியாதவர்கள் என்று  நிந்தனை செய்தார்கள் தங்களைப் பிற்போக்குவாதிகளாகக் காட்டிக் கொள்ளும் நபர்கள்.


மனிதர்கள் மெல்ல மெல்ல தங்கள் தொழில்நுட்பப் போதையில் விழுந்து மயங்கிக் கொண்டிருந்தார்கள். தங்கள் தாயான பூமியைச் சிதைத்து விட்டு வந்து தான் இந்தப் புதிய உலகில்  குடியேறி இருக்கிறோம் என்பதை மனிதர்கள் மறந்தார்கள்.  பகட்டான வாழ்க்கைக்குள்ளேயும்,  நளினம் என்னும்  நடிப்பான போதைக்குள்ளேயும்  மனிதர்கள் கரைய ஆரம்பித்தார்கள். 


இப்படி மனிதர்கள் மயங்கி இருக்கும் வேளையில் தான் அந்த பயங்கரம் இந்த உலகை நெருங்கி வந்தது. 


 இந்தப் பேரண்டமானது எண்ணமுடியாத அளவுக்கு உடுத் திரள்களைக் கொண்டது. ஒவ்வொரு உடுத் திரளும்  பல லட்சம் சூரிய குடும்பங்களைக் கொண்டது.  ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மாறுபட்ட பண்புகள்  கொண்ட கோளங்கள் பலவற்றைக் கொண்டது.


ஒரு சூரியக் குடும்பமானது ஏதோ ஒரு காரணத்தினால் சிதைந்துபோனால் அதிலுள்ள கோளங்கள் தான்தோன்றித்தனமாக இந்த பேரண்டத்தின் ஈர்ப்பு அலைகளில் மாட்டி , காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிய மரக்கட்டையைப் போல் பயணிக்கத் தொடங்கும்.  அப்படிப் பயணிக்கும் ஒரு கோளம் தான் இந்த உலகை நெருங்கி வந்து கொண்டிருந்தது. 


இந்த கோளத்தின் வருகையை இந்த மனிதர்களின் தொழில்நுட்பம் கண்டுபிடித்திருந்தாலும், அந்த தான்தோன்றி கோளம் , இந்த உலகின் மீது மோத வாய்ப்பில்லை என்பதால் மனிதர்கள் அக்கோளத்தைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை.


வானத்தில் சிறு உடு (நட்சத்திரம்) போலத் தெரிய ஆரம்பித்த அந்த கோளம், நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி ஒரு நிலாவைப் போலத் தோற்றம் கொடுக்க தொடங்கியது. அந்த கோளம் இளம் பச்சை வண்ணத்திலிருந்தது. இரவு நேரத்தில் இளம் பச்சை ஒளி இந்த உலகை நிரப்பத் தொடங்கியது. திடீரென ஒரு நாள் இரவு , குருதி சிவப்பாக ஒளி வீசத் தொடங்கியது அந்த தான்தோன்றி கோளம். இந்த நிலையில் இந்த உலகின் மனிதர்கள் சிறு அதிர்வலைகளை உணர தொடங்கினார்கள். அந்த அதிர்வலைகள் எந்த பாதிப்பையும் தராது என்று மனிதர்கள் நம்பினார்கள். ஆனால் ஒரு நாள் அதிர்வலையின் வீரியம் கூட ஆரம்பித்தது. மனிதர்களின் உள்ளம் வெறி கொள்ளத் தொடங்கியது. மனிதர்கள் மிருகங்களைப் போல் செயல்படத் தொடங்கினார்கள். குருதி தாகம் எடுத்த காட்டேறிகள் போல ஒருவரையொருவர் கடித்துக் குதறி மாண்டார்கள். குவியல் குவியலாக மனித பிணங்கள் இந்த நிலம் எங்கும் கிடந்தன. எவரும் உயிர் தப்பவில்லை. அந்த தான்தோன்றி கோளம் ,மெல்ல விலகி விலகி எங்கோ காணாமல் போனது இந்த பேரண்ட நதியில்… 


அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு , மூன்று விண் கப்பல்களில் மனிதர்கள் இந்த உலகிற்கு வந்தனர். அவர்கள் இங்கே நாகரிகம் அடைந்த மனிதர்கள் வாழ்ந்த தடையங்களைக் கண்டனர். ஆனால் அவர்களுக்கு விளங்காத  விடையம் , மனித எலும்புக் கூடுகள் ஏன் குவியல் குவியலாகக் கிடக்கின்றன? இந்த மனிதர்கள் இறந்து போகக் காரணம் என்ன? ஏதேனும் நோய் இவர்களைக் கொன்று விட்டதா? என்பதுதான். 


இருந்தும் வந்தவர்கள் திரும்பிப் போகவில்லை. இன்னும் ஒரு புதிய உலகைக் கண்டு பிடிப்பது கடினம். அதனால் இங்கேயே வாழத் தொடங்கினார்கள். இந்த உலகம் இவர்களையும் நன்றாகவே வாழ வைத்தது. ஆனால் அடுத்த நூறு வருடங்கள் கழிந்த நிலையில் , வானத்தில் சிறிதாக ஒரு உடு (நட்சத்திரம்) போல அந்த தான்தோன்றி கோளம் தெரியத் தொடங்கியது.


முற்றும்.








கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...