கோணல் (சிறுகதை)
"அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான்.
" அது அதன் இயல்பில் இருக்கிறது" கரடி சொன்னது.
" இல்லை , அது நேராக வளர்ந்திருக்க வேண்டும். அதுதான் அதன் இயல்பு " என்றான் மாடு மேய்க்கும் பையன்
" உன் புத்தன் தூங்குகிறான். நீ வலையில் சிக்கிக் கொண்டாய். ஆனாலும் நீ உன் இயல்பில் இருக்கிறாய். புத்தன் விழித்ததும் அவனைக் கொன்று விட்டு, மீண்டும் இந்த மரத்தைப் பார்" என்றது கரடி.
" ஓ அப்படியா, நான் இயல்பில் இருக்கிறேன் தானே?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான்
"ஆம்" என்று கரடி சொன்னது.
வாளை எடுத்து கரடியைக் கொன்றான். கரடியின் எலும்பில் புத்தன் சிலை செய்து மடம் ஒன்றை உருவாக்கிக் கட்டினான். தன் சீடர்கள் கொண்டு கோணல் மரத்தை வெட்டினான்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நேரான மரங்களை நட்டான். தினமும் அமைதியாக அந்த மரங்கள் இடையே நடப்பான். அறுபது வருடங்கள் கழித்தும் பிறகு ஒருநாள் மரங்கள் இடையே இவன் நடக்க மரங்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு கோணல் மரம் வளர்ந்திருந்தது. அவனுக்கு ஆச்சரியம். இது எப்படி சாத்தியம் " நான் அனைத்து மரங்களையும் கவனித்து வந்தேனே"என்று கத்தினான். இவனின் சத்தம் கேட்டு சீடன் ஒருவன் அங்கே வந்தான். அவன், இவனைப் பார்த்து " குருவே! அந்த மரத்தை ஒரு சிறுவிதான் நட்டாள்.
"யார் அவள் இங்கே கூட்டிவா" என்றான் இவன்.
அந்த சிறுவி கூட்டி வரப்பட்டாள். அவள் மெல்லத் தள்ளாடி நடந்து வந்தாள். அவள் விகாரமான உடல் அமைப்பைக் கொண்டிருந்தாள்.
"எதற்காக இந்த மரத்தை இங்கே நட்டு வளர்த்தாய்?" அவன் கேட்டான்
"அது தன் இயல்பில் இருப்பதால் வளர்த்தேன்" என்றால் சிறுவி.
"ஒரு சமுதாயத்தில் அறம் உடையோருக்கு மட்டுமே இடம். அறம் மீறியவர்களுக்கு இடம் கிடைத்தது. அதுபோல்தான் நேரான மரங்களிடையே கோணல் மரத்திற்கு இடமில்லை " என்றான் அவன்.
" கோணல் என்பது குற்றவாளிகளை மட்டும் குறிக்காது. பொது சமுகத்தில் இயல்பாக இருக்க முடியாத யாரையும் குறிக்கும்.அதாவது என்னைப் போல், எங்களைத் தவிர்க்க முயலாதீர்கள் அவ்வளவுதான் "
" ஹாஹா " அவன் சிரித்தான்.
"இந்த மரத்தைக் காலையில் வெட்டி விடுங்கள் "என்று உத்தரவிட்டான் அவன்.
சிறுவி வெறித்துப் பார்த்தாள்.
அதிகாலை மரத்தை வெட்ட வந்தவர்கள் வியந்து நின்றனர் . கோணல் மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாள் சிறுவி.
அங்கே வந்த அவன் " கோணல்கள் இல்லாதவரை நமக்கு நல்லதுதான். மரத்தை வெட்டுங்கள். அந்த விகாரி பெண்ணை புதைத்து விடுங்கள்"
அவனுக்குள் புத்தர் நீண்ட தூக்கத்திலிருந்தார். ஆனால் உலகின் சிறந்த புத்த துறவியாக அவன் இருந்தான்.
முற்றும்

