" ஏ... தம்பி, நில்லுப்பா" அந்த குரல் வெற்று வெளியில் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தபின், நெற்றியில் வியர்வை துளிர்க்கக் குரலின் ஆதாரத்தைத் தேடினான். கண்களின் பார்வைக்குத் தட்டுப்படாமல் குரலின் ஆதாரம் எங்கோ இருந்துவிட, உச்சி நேரம் உள்ளத்தில் கிலியை விதைத்தது. பாட்டி சொன்ன கதைகளில் உள்ள பல்லை இளிக்கும் பேய்கள் அக திரையில் ஓடி வேடிக்கை காட்டின. தயக்கத்துடன் அவன் திரும்பி நடந்தான். " ஏ... தம்பி நில்லுப்பா" மீண்டும் அதே குரல். இப்போதும் குரலின் ஆதாரம் தென்படவில்லை. கதிரவனைத் தவிர வானத்திலும் யாருமில்லை. தூரத்தில் தெரியும் ஒற்றை மரத்தைத் தவிர அவன் கண்ணுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை.
"ஏ... தம்பி நில்லுப்பா"
" ஏ... தம்பி நில்லுப்பா"
" ஏ... தம்பி நில்லுப்பா"
அந்த குரல் திரும்ப ,திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் நிற்காமல் நடந்தான். பொட்டல் காட்டின் நடுவே புழுதியான வெக்கை நிறைந்த அந்த மண் அவனின் வெற்று கால்களுக்கு வெப்பத்தைப் பரிசாகத் தந்து கொண்டிருந்தது. இந்த பொட்டல் வழியாக இதுவரை யாரும் போனதில்லை. இந்த பொட்டல் வழியாக நாயோ, பூனையோ தவறியும் நுழைவதில்லை. அப்படி நுழைந்த எதுவும் திரும்பி வந்ததில்லை.
காலையில் அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டான். அந்த கோபம்தான் அவனை இந்த பக்கம் உந்தி தள்ளிய விசை. அம்மா பேசியது அப்படியே அவனுக்கு உள்ளத்தில் வந்து நின்றது.
" அடே.... பாவி என்னடா பண்ணி வச்சிருக்க , உங்கோப்பன போல நீயும் கொலக்கார பாவி ஆவலாமுனு இப்படி பண்ணியா... அந்த புள்ள என்ன பாவமடா பண்ணுச்சி... அதை ஏன்டா அடிச்சி மண்டைய ஒடச்ச... நாசமா போரவனே... இனிமே நீ ஊட்டுக்கு வரதடா... எங்கேயே போ பரதேசமா... போட" கோபமும் , வருத்தமும் கலந்த அம்மாவின் குரல் இவன் உள்ளத்தின் பதிவுகளில் ஆழமாகப் பதிந்திருந்தது.
காந்திமதி அவனுடைய மாமன் மகள் வயது பன்னிரண்டு. அவனுக்கு அவள் மேல் ஆழமான பிரியம். ஆனால் அந்த பெண்ணுக்கு எப்போதும் அவனைப் பிடிக்காது. அவனுக்கு வயது பதினான்கு. பல முறை அவளை நெருங்கி " நாம பெரிசானதும் உன்னை நாதான் கட்டிகிடுவேன். என்ன சரியா? " என்று கேட்பான்.
அவளோ " உன்ன நாயி கூட கட்டிக்காது. எங்கிட்ட வந்து பேசுற வேலையெல்லாம் வச்சுகாத" என்று சொல்வாள். இப்படி அவள் சொல்வதை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான் அவன்.
ஆனால் இன்று தன் நண்பன் ரங்கசாமியுடன் பள்ளிக் கூடம் போகும் போது , வழியில் காந்திமதி தன் தோழிகளுடன் இவர்களுக்கு முன் போய்க் கொண்டிருந்தாள்.
" உன் மாமன் பொண்ணு காந்திமதி முன்ன போறா" என்று ரங்கசாமி சொன்னதும்.
" ஆமா, அதுக்கு என்ன இப்ப?" என்றான் அவன்.
" அவகிட்ட போய் , உன்னை நான்தான் கட்டிகிடுவேனு சொல்லுப் பார்போம்"
" வேணாடா, கூட்டாளி புள்ளைங்களோட போறா"
" அது என்ன இப்ப? தைரியமான ஆம்பளைய இருந்தா போய் சொல்லுப் பார்ப்போம்"
" சும்மா இருடா"
"பயந்தாங்கொள்ளி"
" நான் இப்போ போய் அவகிட்ட சொல்லிட்டா, நீ உன் காத அறுத்துகிறியா சொல்லு? நான் போய் சொல்றேன்"
" எங்கிட்ட பத்துரூவா இருக்கு. நீ அவகிட்ட சொல்லிட்டா, இந்த பத்துரூவா உனக்குத்தான்" என்று பத்து ரூபாய் நோட்டு ஒன்றை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினான் ரங்கசாமி.
" மெய்யாலுமா?"
" மெய்யாலும், பத்துரூவா உனக்குத்தான்" என்று ரங்கசாமி சொல்ல, இவன் வேகமாக நடந்து காந்தி மதியின் அருகில் போனான்.
" நான் தான் உன்னை கட்டிகிடுவேன்" அவள் காதருகில் சத்தமாகச் சொல்லிவிட்டு அவன் நிற்க. ரங்கசாமி அவன் பின்னால் வந்து நின்றான்.
" கொலைகாரன் மகனுக்கு என்னை கட்டிகிடனுமா? நீயும் உங்கோப்பன போல ஜெயிலுக்குத் தான் போக பேற. எங்கிட்ட வராத நாயே" அதீத வெறுப்புடன் காந்தி மதி சொன்னாள். கூட இருந்த பெண் பிள்ளைகள் எல்லோரும் கலகல என்று சிரித்துவிட , அவன் பின் நின்ற ரங்கசாமியும் சிரித்துவிட, அவனின் உள்ளத்தில் இனம்புரியாத புயல் போன்ற சீற்றம் ஒன்று கிளம்பி அவன் உச்சந்தலையில் மோதியது.
சீற்றம் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிடும். தன் பையிலிருந்த இரும்பு அடிக்கோலை எடுத்து காந்திமதி தலையில் ஓங்கி அடித்து விட்டான் அவன். காந்திமதி தலையில் குருதி வெள்ளம் பெருகி, முகம் எல்லாம் பரவ அவள் மயங்கி விழுந்தாள்.
கூட இருந்த பெண் பிள்ளைகள் அலற, ரங்கசாமி என்ன செய்வது என்று தெரியாது நிற்க. பக்கத்து வயலில் ஏர் உழுது கொண்டிருந்த மல்லைய கிழவர் ,பெண் பிள்ளைகளின் சத்தம் கேட்டு ஏரை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். அவனுக்குப் புரிந்தது எல்லாம் எல்லை மீறிப் போய்விட்டதென்று. ஓடினான் வீட்டை நோக்கி... அடுத்த அரை மணி நேரத்தில் அம்மாவும் துரத்த... கோபமும் ,கிலியுமாக இந்த பொட்டலுக்குள் நுழைந்து விட்டான் அவன்.
அவன் பொட்டலுக்குள் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. இந்த பொட்டலைக் குறித்துப் பல கதைகள் உண்டு. அந்த கதைகளை அவன் பாட்டி அவனுக்குச் சொல்லிருக்கிறாள்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவை வெள்ளையர்கள் கட்டுப்படுத்தி வந்தனர். ஜெர்மானியர்களை எதிர் கொள்ள இங்கிலாந்து அரசுக்கு உதவப் பல ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். அப்படி முயன்ற ஒரு வெள்ளைக்காரன் ராபர்ட். அந்த ராபர்ட் இந்த பொட்டலில் ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவி, அதில் ஏதோ ஆய்வுகளைச் செய்து வந்திருக்கிறான்.
ஒரு நாள் விடியற்காலையில் பயங்கரமான ஓசை இந்த பொட்டல் பகுதியில் கேட்டிருக்கிறது. இந்த ஊரார் ஜப்பான் காரன் குண்டு போடுகிறான் என்று பயந்து வீட்டிலே ஒடுங்கி விட்டனர். வெகுநேரம் கழித்து வெளியே வந்த ஊர் மக்கள் என்ன ?ஏது ? என்று குழம்பி நின்று இருக்கிறார்கள். ஊரிலிருந்து வாலிபர்கள் நால்வர் பொட்டலுக்குள் புகுந்து என்ன நடந்து என்று தெரிந்து கொள்ள போயிருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள்தான் யாரும் திரும்பவில்லை. நாய் ,பூனை என்று எந்த உயிரினங்களும் அந்த பொட்டல் நிலத்தில் நுழையாததைக் கண்ட ஊர் மக்கள் அந்த பொட்டலை ஒதுக்கி வைத்துவிட்டனர். அந்த பொட்டல் ஒரு தீட்டு பட்ட இடம் என்று ஒதுக்கிவிட்டனர். இதுதான் அவன் பாட்டி இந்த பொட்டலைக் குறித்துச் சொன்ன கதை.
இதைத் தவிரவும் இந்த பொட்டலில் அந்த ராபர்ட், குருதி குடிக்கும் பேயாக அலைகிறான் என்ற ஒரு கதையும் உண்டு. இது மட்டும் அல்லாமல் ராபர்ட் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு சென்றதாகவும், அவள் அவனைத் தீஞ்சொல் கொண்டு சாபம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் இந்த பொட்டல் தீட்டு பட்ட இடமாகிவிட்டது என்று சொல்வாரும் உண்டு. எது எப்படியோ இப்போது அவன் இந்த பொட்டலில் இருக்கிறான்.
" ஏ... தம்பி, நில்லுப்பா" இந்த குரல் அவனுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த பொட்டலில் நடந்து, நடந்து அவன் கால்கள் வலித்தன. அந்த பொட்டல் முடிவில்லா பெருவெளி போல் நீண்டு கொண்டே இருந்தது. இந்த பொட்டலைவிட்டு வெளியேற வழி தேடி அழைத்தான். எங்கும் ஒரே பொட்டல் மட்டுமே அவன் கண்களுக்குத் தென்பட்டன.
களைத்துப் போன அவன், தூரத்தில் ஒரு கட்டிடத்தைக் கண்டான். அது பாழடைந்த பழைய கட்டிடம். அதுதான் ராபர்டின் ஆய்வுக் கூடாக இருக்கவேண்டும் என்று சரியாக ஊகித்தான் . அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தான். நீளமான படிக்கட்டுகள் மண் படிந்து இருந்தன. படிக்கட்டுகளைத் தாண்டி , மேலே ஏறி அந்த கட்டிடத்தின் முன் கதவிடம் வந்தான். கதவு வெறுமனே சாற்றியிருந்தது. அதை கை வைத்துத் தள்ளினான். உள்ளே பெரிய அறை, அறைகலன்கள் தூசி படிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்க , அறையை நோட்டமிட்டான்.
அறையின் மறு எல்லையில் ஒரு கதவு இருந்தது. அதை நோக்கி நடந்தான். அந்த கதவைத் திறந்தான். உள்ளே இன்னும் ஓர் பெரிய அறை , ஆனால் அறையின் நடுவே மிகப்பெரிய எந்திரம் இருந்தது. அதை நெருங்கிப் போய் அந்த இயந்திரத்தை நோட்டமிட்டான்.
அந்த எந்திரத்தின் முன்பக்கம் போன அவன் மிரண்டு போனான். அங்கே அந்த வெறும் இடத்தில் அதாவது அந்தரத்தில் ஒரு வித்தியாசமான ஓட்டை கருப்பு வண்ணத்திலிருந்தது. அவனுக்கு ஒரே குழப்பம் எப்படி வெறும் இடத்தில் அதாவது அந்தரத்தில் ஓட்டை போட முடியும் என்று. அந்த ஓட்டையின் கருப்பு வண்ணம் மிக வித்தியாசமாக ஒளிர்வது போல அவனுக்குத் தோன்றியது. மெல்ல அதை நெருங்கி அதைத் தொட்டான் அவ்வளவு தான் அவன் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டான்.
ஆற்றில் ஓட்டத்தில் இழுக்கப்பட்ட ஒருவன்; அதே வேகத்தில் வெளியே தூக்கி எறியப்பட்டால் எப்படி இருக்குமோ அதேபோல் அவன் தூக்கி எறியப்பட்டான். அவன் நிலத்தில் தான் வந்து விழுந்தான். ஆனால் ஒரே இருட்டாக இருந்தது.
தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தை நோக்கி அவன் நடந்தான். அவன் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்க, நடக்க ஏற்கனவே தெரிந்த நிலத்தில் இருப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அந்த வெளிச்சம் ஓர் ஓட்டு வீட்டின் மின்சார விளக்கு. அந்த வீட்டை நெருங்கினான். வீட்டின் முன் பக்கம் ஒரு சிறு திண்ணை இருந்தது. அதில் ஒரு பெண் அமர்ந்து எதையோ அறிந்து கொண்டிருந்தாள். இந்த இடமும் அவனுக்கு நன்றாகப் பழக்கமான இடம்தான். அந்த பெண் சாந்தி அக்காள். அவனுக்கு பெரிய ஆச்சரியம்; சாந்தி அக்காள் போன வருடம் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிட்டாளே! என்று நினைத்து அவன் மிரண்டான். அவன் விலகி போனான். சாந்தி அவனைப் பார்த்து விட்டாள்.
" ஏ... தம்பி நில்லுப்பா" என்று அவனைக் கூப்பிட்டாள் சாந்தி. அவன் அதிர்ந்து நின்றான். அவன் பொட்டல் நிலத்தில் ஆதாரம் இல்லாமல் கேட்ட அதே குரல்.
அவன் எச்சில் விழுங்கினான்.
" யாரு... இங்க வாடா" சாந்தி கூப்பிட்டாள்.
அவன் பயத்துடன் அவளை நெருங்கினான்.
" அட, தாய்யக்கா மகன். இன்நேரத்திற்கு இங்க என்ன செய்ற?"
" வெளிக்கி போலானு வந்தேங்'கா" என்றான் அவன்.
" இருட்டு நேரம் பாத்து ஊட்டுக்குப் போ" என்றாள் சாந்தி.
"சரிக்கா " என்று அவன் ஒருபக்கம் நடக்க , " டேய் ,கண்ண எங்கடா வச்சிருக்க , தடம் இங்க இருக்கு " என்று அவள் தடத்தை நோக்கி கை காட்டினாள்.
அவள் காட்டிய தடத்தில் அந்த இருட்டில் வேகமாக நடந்தான். இப்போது இந்த இடம் தெளிவாக அவனுக்கு விளங்கியது. இது அவன் ஊர்தான்.பொட்டல் நிலத்தைவிட்டு தன்னை அந்த எந்திரம் வெளியேற்றிவிட்டது என்று மகிழ்ந்தான். ஆனால் தன் மாமன் மகளின் மண்டையை உடைத்தற்காக அம்மா தன்னை துரத்தினாளே, தன்னை வீட்டில் சேர்த்துக் கொள்வாளா? என்ற கேள்வி இவன் உள்ளத்தில் எழுந்தது.
சாந்தி அக்காள் எப்படி உயிரோடு இருக்கிறாள் என்ற கேள்வியும் அவனுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது. அவன் நடந்து ஊருக்குள் நுழைந்தான். யாரும் அவனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இவன் வீடு ஒரு மேட்டின் மீது இருக்கிறது. அந்த மேட்டை நெருங்கியவன் மீண்டும் மிரண்டு போனான். அவன் வீடு மாடி வீடாக இருந்தது. அவன் வீடு கூரை வீடுதான் ஆனால் எப்படி மாடி வீடானது? அவன் குழம்பிப்போனான்.
அவன் வீட்டை நெருங்கப் பயந்தான். அவன் வீட்டின் அருகில் இருக்கும் வயலில் பருத்தி விதைக்கப்பட்டிருந்தது. பருத்திச் செடிகள் உயரமாக வளர்ந்து நின்றன. பருத்திக் காட்டுக்குள் புகுந்து மறைந்து நின்று தன் வீட்டைக் கவனித்தான். வீட்டின் முன்பக்கம் பெரிய களம் இருந்தது. அதில் ஒரு கட்டில் கிடந்தது. அவன் பார்த்துக் கொண்டிருக்க , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு அவனும் ,காந்திமதியும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏதோ பேசி சிரித்தபடி அந்த கட்டிலில் வந்து அமர்ந்தார்கள். பருத்திக் காட்டிலிருந்த அவன் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானான். அதேநேரம் அவனுக்குக் கொஞ்சம் விளங்கியது. இது தன்னுடைய உலகம் அல்ல; இது வேறு உலகம் என்று அவனுக்குப் புரிந்தது.
தன் பாடப்புத்தகத்தில் படித்த ஒரு கோட்பாடு அவனுக்கு நினைவுக்கு வந்தது. இணை பேரண்டங்கள் (Parallel universes)என்ற கோட்பாடு தான் அது. இந்த உலகத்தில் தானும் ,காந்திமதியும் நட்புடன் இருக்கிறோமே ? அது எப்படி சாத்தியம் என்று யோசித்தான். அப்போது அவன் வீட்டிலிருந்து வேறு ஒரு நபர் வெளியே வந்தார். அது அவனுடைய அப்பா. இந்த உலகத்தில் தன் அப்பா கொலை செய்யவில்லை அதனால் அவர் சிறைக்குப் போகவில்லை. எனவே இந்த உலகத்தில் அவன் வாழ்க்கை வேறு மாதிரியாக உள்ளது என்பதை உணர்ந்தான்.
இணை பேரண்டங்களில் வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும் என்று படித்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இது தன்னுடைய உலகம் அல்ல; இது தன்னுடைய வாழ்க்கையும் அல்ல என்று அவனுக்குத் தெரியும். இருந்தும், இந்த உலகத்தின் தான்(அவன்) மகிழ்வாக வாழ்கிறான் என்பது இவனுக்கும் மகிழ்வாக இருந்தது. அந்த இருட்டில் இந்த உலகத்தில் தனக்கான புது வெளிச்சத்தைத் தேடி , அந்த வீட்டைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தான் அவன்.
....

