அவன் வருகையைக் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. தன்னால் சொந்தக் காலில் நின்றுவிட முடியும் என்று நம்பி , குடும்பத்தை விட்டுப் போனவன். அவன் தொட்ட எதுவும் துளிர்க்க வில்லை. தான் வாழ்க்கையில் அடைய நினைத்த அனைத்தையும் பிறர் அடைவதைக் கண்டு ஏங்கியிருக்கிறான். தானும் ஒரு நாள் நினைத்ததை அடைந்தே தீருவோன் என்று நம்பினான். இப்போது அவனுக்கு அந்த நம்பிக்கை கொடுத்த அயர்ச்சி மட்டுமே மிச்சம்.
வீட்டுக்கு வந்தவனை யாரும் பெரிதாக அக்கறை கொண்டு வரவேற்கவில்லை. தம்பியின் வீட்டில் ஒரு சிறு அறையில் தங்கிக் கொண்டான். இவன் தம்பி நல்ல சம்பாத்தியத்தில் இருப்பவன். இவனுக்குச் சாப்பாடு போடுவதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை. இவன் தம்பிக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் , ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். பெண் குழந்தை நான்காம் வகுப்பு படிக்கிறாள்.
முதல் வாரம் வயலில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து நேரத்தை ஓட்டினான். இரவு வந்ததும் தன் அறையில் வந்து அடைந்து கொள்வான். ஏதாவது புத்தகம் ஒன்றில் மூழ்கிவிடுவான். காலை , மதியம் மற்றும் மாலை மூன்று நேரமும் சாப்பாட்டை ஒரு தட்டில் போடப்பட்டு மூடி வைத்து விடுவாள் தம்பி மனைவி. சாப்பாட்டில் இவனுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் தனிமை இவன் மனதில் இறுக்கத்தை வளர்த்துக் கொண்டு வந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலிருந்த ஓடையில் தூண்டில் ஒன்றைப் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் இவன். கொலுசு அணிந்த யாரோ தயங்கித் தயங்கி நடந்து வரும் ஓசையை இவன் கேட்டான். இவன் மெல்ல ஓரக் கண்ணால் பார்த்தான். குட்டப் பாவாடையும், சட்டையும் அணிந்து கொண்டு , இரட்டை ஜடையுடன் , கையில் ஒரு பழைய தூண்டிலைப் பிடித்தபடி இவன் பின்னால் வந்து நின்றாள் தம்பி மகள் வள்ளி.
இவன் வீடு திரும்பியதிலிருந்து இதுவரை இவனிடம் ஒரு வார்த்தையும் பேசியதில்லை வள்ளியும் ,இவள் தம்பியும். இவன் வள்ளி பிறக்கும் முன்னே ஊரைவிட்டுப் போனவன்.
இவன் வள்ளியிடம் எதுவும் பேசாமல் தூண்டிலை கவனித்தபடியே கல்லில் அமர்ந்திருந்தான். வள்ளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல இவன் நெருங்கி நின்று " இதுல எப்படி மீன் பிடிக்கிறது. எனக்குச் சொல்லி தருவியா பெரியப்பா?" என்று தயங்கிக் கேட்டாள்.
" உன் பேரு என்னனு சொன்னியான உனக்குத் தூண்டில் போட கற்று தாரேன்" என்று வள்ளியிடம் வேடிக்கையாகச் சொன்னான்.
" என் பேரு வள்ளி. பெரியப்பா" அப்பாவியாகச் சொன்னாள் வள்ளி.
வள்ளியின் முகத்தில் சிறு கசடும் இல்லை. குழந்தைகள் தெய்வம் என்பதில் சிறு பிழையும் இல்லை. வள்ளிக்குத் தூண்டிலைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தான் இவன். தூண்டில் போட கற்றுக் கொண்ட வள்ளிக்குக் கடவுளையே கண்டுவிட்ட மகிழ்ச்சி. குழந்தைகளின் மகிழ்ச்சி மட்டுமே முழுமையானது.
வள்ளியும் , இவனும் ஒரு பாத்திரம் நிறைய ஓடை மீன்களைப் பிடித்திருந்தார்கள். இவனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு மனம் லேசானது. வள்ளி இவனுடன் நன்றாக நட்பாகிப் போனாள். இரவு உணவின் போது ,தன் உணவு தட்டை எடுத்துக் கொண்டு வந்து இவனுடன் அமர்ந்து சாப்பிட்டாள் வள்ளி.
இவன் இந்த வீட்டைவிட்டு வெளியேறிப் போகும் வரை வள்ளி இவனுடன் தான் அமர்ந்து சாப்பிட்டாள்.
வள்ளி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்தி நேரம் வைக்கோலை அள்ளி மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தான் இவன்.
" ஏ... பெரியப்பா, உன்னைப் பத்தி ஒரு டீச்சர் கேட்டாங்க" என்று மஞ்சள் பையைத் தோளில் போட்டபடி, கள்ளம் இல்லா சிரிப்பொலியோடு வள்ளி வந்து நின்றாள்.
" யாரு தங்கம் ?" தங்கம் என்று செல்லமாக வள்ளியை அழைப்பது இவன் வழக்கம்.
" வாணி டீச்சர். புதுசா ஆறாம் வகுப்புக்கு இங்லீஷ் சொல்லித்தர வர்ராங்க. அவிங்க உங்களோட படிச்சாங்களாம். அவீங்க உங்களோட பேசனும்னு சொன்னாங்க.நாளைக்கு அந்தியில் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரச் சொன்னாங்க" சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் பேசினாள் வள்ளி.
பள்ளிக் காலத்தில் வாணியின் மீது இவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பைக் குறித்து ஒரு முறை கூட அவளிடம் இவன் சொன்னது கிடையாது. பள்ளி காலத்திற்குப் பிறகு வாணிக்குத் திருமணம் ஆன செய்தியை மட்டும் கேள்விப் பட்டிருந்தான். மற்றபடி வேறு எந்த தகவலும் இப்போது வரை இவனுக்குத் தெரியாது.
இவன் தெப்பக்குளத்தில் வாணியை சந்தித்தபிறகு இவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம். வாணி அவள் கணவனால் கைவிடப் பட்டுவிட்டாள். காரணம் இவளால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக் காலத்திலிருந்து அவள் மீது இவனுக்கு ஈர்ப்பு உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் துணையாக்கிக் கொண்டார்கள். தன் தம்பி வீட்டை விட்டு விட்டு வாணியுடன் வாழ ஆரம்பித்தான் இவன். முறையான திருமணம் எதையும் இவர்கள் செய்து கொள்ளவில்லை. மனம் பொருந்தி வாழ்ந்தார்கள். வள்ளிக்கு தன் பெரியப்பாவை அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமும் இருக்கவே செய்தது.
காலம் எவ்வளவு வேகமானது என்பதை வாழ்ந்து முடித்தவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் கண்ணிமைக்கும் நொடிதான் வாழ்க்கையைத் தின்றுவிட்டும் காலம் என்று.
வள்ளி நேற்றுதான் சிறு பிள்ளையாக இருந்தாள் . இன்று அவள் வளர்ந்துவிட்டாள். அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நான்கு வருடத்தில் வள்ளி இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானாள். வள்ளியின் தம்பிக்கு ஒரு நாள் திருமணம் நடந்தது. அவனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டான்.
வள்ளி தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தாள். காட்டாறு கூட கொஞ்சம் மெதுவாகப் போகும் போல , ஆனால் காலம் வெகு விரைவாகப் போனது.
எல்லாம் மாறிப் போன,வாணி ஒருநாள் இறந்து போனாள். இவன் மீண்டும் ஒண்டிக் கட்டையானான். இவனுக்கு என்று பிரித்து விடப்பட்ட நிலத்தில் ஒரு குடிசைப் போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தான். இவன் தம்பியும் ,வள்ளியின் அப்பவும் ஒரு நாள் இறந்து போனான். அன்று வள்ளி அழுத அழுகை சொல்ல முடியாதது. ஒரு நாள் அவள் தாயும் இறந்து போனாள். ஒருநாள் வள்ளியின் கணவனும் இறந்து போனான்.
ஒரு நாள் ஓட்டையில் தூண்டில் போட்டபடி இவன் அமர்ந்திருந்தான். யாரோ பின்னால் நடந்து வந்தார்கள். மெல்லத் திரும்பிப் பார்த்தான். வள்ளி இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நேற்றுதான் அவளைச் சிறுவியாகப் பார்த்த நினைப்பு அவனுக்கு.
" பெரியப்பா, மீன் பிடிக்கிறியா?"
" ஆமா தங்கம்"
" கொடு, நான் பிடிக்கிறேன்" என்று தூண்டிலை வாங்கிக் கொண்டாள். இருவரும் பாத்திரம் நிறைய மீன் பிடித்தார்கள். வள்ளி தான் மீன் குழம்பு வைத்தாள். மிக அட்டகாசமாகச் சமைத்திருந்தாள்.
" தங்கம் எப்ப ஊருக்கு போற?"
"நாளைக்குப் பெரியப்பா"
" ஏன் போற?"
" என் வீட்டுக்குப் போய் தானே ஆகனும்?"
" உன் அப்பா உயிரோடு இருந்து , அவரு தனியாக இருந்தால் அவரை பார்த்துக் கொண்டு கூட இருக்க மாட்டியா?"
வள்ளி தலையை நிமிர்த்தி இவனைப் பார்த்தாள்.
" எனக்கு வாரிசுனு யாருமில்லை. என் நிலத்தை நீயே எடுத்துக் கொள். என் கூடவே இருந்து விடு" தயங்கிப்படி கேட்டான்.
"நானே கேட்காலாம்னு நினைச்சேன். நீயே சொல்லிடப் பெரியப்பா. எனக்கும் தனியாக இருக்கப் பிடிக்கல. நான் உன்னைப் பார்த்துக் கொண்டு உன்னோடே இருந்துவிடுறேன் பெரியப்பா" என்றாள் வள்ளி.
அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினான் இவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக