திங்கள், 19 டிசம்பர், 2022

ஓங்கில் உலகம் (சிறுகதை)


 

முருகன் புதிய கோளத்தைத் தேடி தன் விண் ஓடத்தை வெளி-காலத்திற்கு மத்தியில் செலுத்திக் கொண்டிருந்தான். முருகன் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கப் போகிறான். அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அரிதானது. உடு திரள் மத்தியில் பயணிக்கும் அளவுக்கு மனிதர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்டாலும் , சில நோய்களுக்கு மனிதர்களால் தீர்வு காணமுடிவில்லை என்பது மெய்.


உடு திரளின் வெளிப்புறத்தில் ஒரு சிறு கோளம் மனிதனின் முதன்மை தேவையான தண்ணீரைக் கொண்டிருந்தது. அதில் தரையிறங்கினான் முருகன். அந்த கோளத்தில் தண்ணீர் இருந்தாலும் , முறையான பாதுகாப்பு மூச்சு கருவி இல்லாமல் மூச்சு விட முடியாது. முருகன் தற்காப்புடன் அந்த கோளத்தில் தன் வாழா தேவையான செயற்கையான பகுதியை உருவாக்கிக் கொண்டான். இந்த கோளத்தில் ஆறு மணி நேரம் பகல், ஆறு மணிநேரம் இரவுப் பொழுதாகவும் இருந்தது. பன்னிரண்டு மணி நேரம் ஒரு நாள் என்ற கணக்கில் ஒரு மாதம் கழிந்தது.


முருகன் பாதுகாப்பு மூச்சு கருவியை அணிந்து கொண்டு அந்த கோளத்தின் கடல் கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தான். கடல் அடர் கறுநீலத்தில் சிறு சிறு அலைகளுடன் ஆர்ப்பாட்டமே இல்லாமல் பெரிய மிருகம் ஒன்று அமைதியாக மூச்சு விடுவது போலக் காட்சி தந்தது. தூரத்தில் ஒரு சிறு குன்று தென்பட்டது. அந்த குன்றை இங்கே வந்ததிலிருந்தே முருகன் கவனித்திருக்கிறான், ஆனால் அதன் அருகில் போனதில்லை. இன்று அதை நெருங்கிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் நடந்தான்.


அந்த குன்றை நெருங்கி அதை கவனித்தான். அந்த குன்று கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் மீது படிந்திருந்த மண்ணை கையால் தேய்த்துப் பார்த்தான். அந்த குன்று வெண் பளிங்கு தன்மையைக் கொண்டிருந்தது. உதிரியான பளிங்குக் கற்களைத் தனியாகப் பெயர்த்து எடுக்க முடிந்தது. அதில் ஒரு பளிங்குக் கல்லைக் கையில் எடுத்தான். அவன் கையுறைகள் அணிந்திருந்தான். ஒரு கையிலிருந்து கையுறையைக் கழற்றிவிட்டு அந்த பளிங்குக் கல்லைத் தொட்டுப் பார்த்தான். அப்போது மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தான். அவன் நினைவுகள் எல்லாம் உறிஞ்சப்படுவது போல உணர்ந்த முருகன், சட்டென்று அந்த கல்லைக் கடலில் தூக்கி எறிந்து விட்டான்.


முருகனுக்குக் கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருந்ததால் அவன் உடனே தன் பாதுகாப்பு அமைப்புக்குத் திரும்பினான். படுகையில் படுத்தவன் உறங்கிப்போனான். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கண்விழித்தான். எழுந்தவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு அசைபோட்டவன். மீண்டும் மூச்சு கருவியை எடுத்து அணிந்து கொண்டு தன் பாதுகாப்பு அமைப்பை விட்டு வெளியேறி வந்த முருகன் கடலை நோக்கி நடந்தான். கடலை கவனித்தான். அவனுக்கு அமைதியான மிருகமாகவே கடல் தெரிந்தது. கடல் தண்ணீரில் நேரடியாக அவன் காலை வைத்தது கிடையாது. பாதுகாப்பு உடையுடன் தான் கடலில் தண்ணீர் எடுப்பான். இப்போது கடல் அவனை அழைப்பது போல அவனுக்குப் பட்டது. அவன் கடலை நெருங்கி தண்ணீரில் கால் வைத்தான். பாதுகாப்பு உடையில்தான் இருந்தான்.


" கடலுக்குள் வா" என்ற மர்ம குரல் அவன் காதுகளை எட்டியது. முருகன் வியந்து போனான். அந்த குரல் தமிழிலிருந்ததுதான் அவனுக்கு வியப்பு. மனிதர்கள் மத்தியில் ஆங்கிலமே முதன்மை மொழியாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்க தன் தாய் தனக்குச் சொல்லிக் கொடுத்த பழம்பெரும் மொழியில் அந்த குரல் இருக்க முருகன் பெரும் வியப்புக்கு உள்ளானான்.


" தயங்க வேண்டாம். உனக்கு எந்த தீங்கும் நேராது. கடலுக்குள் இறங்கி வா. அஞ்சாதே " என்று மூன்று அந்த குரல் மர்மமாக ஒலித்தது. இன்னும் சில வருடங்களில் இறக்கப் போகும் தான். வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கிறேன். ஆனது ஆகட்டும் என்று கடலில் இறங்கினான் முருகன். அவன் கடலில் இறங்க, இறங்கத் தண்ணீர் அவனை விழுங்கியது. சட்டென்று அவன் முழுவதும் மூழ்கியது அவனைச் சுற்றி ஒரு காற்று குமிழி அவனை உள் வாங்கிக் கொண்டு அவனைக் கடலின் ஆழத்திற்கு எடுத்துச் சென்றது.


அந்த ஆழத்தில் மிக நுட்பமான, ஒளிரும் பாசிகள் மூலம் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் பிரமாண்டமாக அவனுக்குக் கட்சி அளித்தன. அவன் அந்த கட்டமைப்பின் மத்திய பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்த கட்டமைப்புகளிலிருந்து ஓங்கில் மீன் அமைப்பு கொண்ட உயிரினங்கள் வெளிப்பட்டன. அவன் முன் ஓர் ஓங்கில் மீன் மிதந்து வந்தது. அங்கிருந்த அனைத்து ஓங்கில்களுக்கும் மூன்று விரல்கள் கொண்ட இரண்டு சிறு கைகள் இருந்தன.


அவன் முன் வந்த ஓங்கில் மீன் தன் கையில் ஒரு பளிங்குக் கல்லை வைத்திருந்து.


" இந்த கல் மூலம் உன் இருப்பை நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்த கல்லில் உன் நினைவுகள் பதிவாகியுள்ளது. உன் தாய் மொழியையும் இதைக் கெண்டே நான் அறிந்தேன்‌. வேறு கோளத்திலிருந்து எங்கள் கோளத்தில் குடியேறியிருக்கிறாய்" என்ற குரல் மட்டும் கேட்டது.


"ஆம் " என்றான் முருகன்.


" நீ இங்கே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. உன்னைத் தொடர்ந்து உன் இனத்தவர் இங்கே வர வாய்ப்புள்ளது. உன் இனத்தவர் "மனிதர்கள் " என்று அறியப்படுகிறீர்கள். உள்ளத்தில் ஒன்று வைத்து , புறத்தில் ஒன்று பேசும் ஆபத்தான இனம் உன் இனம். உங்கள் இனத்தால் எங்கள் உலகிற்கு ஆபத்து வருவது நாங்கள் விரும்பவில்லை" குரல் மட்டும் கேட்டது. அந்த ஓங்கில் மீன் வாய் அசையவில்லை.


" நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் சில வருடங்களில் இறந்து விடுவேன்" என்றான் முருகன்.


" அது எங்களுக்குத் தெரியும். உன் நினைவில் அதைப் பார்த்தோம். உன் இனத்தவர்களை நினைத்தே நாங்கள் அஞ்சுகிறோம். நாங்கள் ஓர் உதவியை உனக்குச் செய்கிறோம். அதற்குப் பதிலாக எங்களுக்கு ஓர் உதவியை நீ செய்ய வேண்டும் " என்று குரல் கேட்டது.


" என்ன உதவி?" என்றான் முருகன்.


" உன் நோய்க்கு நாங்கள் தீர்வு தருகிறோம். அதே நேரத்தில் நீ இந்த கோளம் முழுவதும் மனித தொழில்நுட்ப பார்வையிலிருந்து மறக்கக் கூடிய கருவியை உருவாக்கித் தரவேண்டும். என் சொல்கிறாய்" என்றது குரல்.


" உங்களால் என் நோயைச் சரி செய்துவிட முடியுமா?" என்றான் முருகன்.


"இந்த கடலில் கிடைக்கும் சில கனிமங்கள் உன் உடலில் செயல்படத் தகுதியானவை. அவை கொண்டு ஒரு மருந்தை எங்களால் உருவாக்க முடியும். அது உனக்கு நீண்ட ஆயுளை அளிக்கும். உன்னால் எங்களுக்குத் தேவையான கருவியை உருவாக்க முடியுமா?" என்றது குரல்.


"முடியும் " என்றான் முருகன். முருகன் மிகச்சிறந்த பொறியாளன்.


அடுத்த ஒரு மாதத்தில் முருகன் அந்த கருவியை உருவாக்கி விட்டான். ஒன்று மேற்பட்ட கருவிகளை உருவாக்கி அந்த கோளம் முழுவதும் பதித்தான் முருகன். எந்த மனித தொழில்நுட்பமும் இந்த கோளத்தை அடையாளம் காணமுடியாது.


முருகனுக்கு நோய்க்கு மருந்து கிடைத்தது. மருந்துடன் இந்த கோளத்தை விட்டு வெளியேறினான் முருகன்.


மனித கணக்குப்படி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முருகன் வாழ்ந்தான் என்று சொல்லப்படுகிறது.



முற்றும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...