மை இருட்டாக இருந்தது. செல்வி தன் ஏழு மாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு எந்த நேரத்திலும் அப்பன் வீட்டுக்குக் கிளம்பிவிடும் வழக்கம் கொண்டவள் செல்வி. இதுதான் முதல் முறை இருட்டு நேரத்தில் புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு அப்பன் வீட்டுக்கு இவள் போவது.
தன் மாமியார் சுருக்கு என்று ஒரு சொல், சொல்லி விட்டாள் என்று தன் புருஷனிடம் செல்வி சொன்னபோது "என் அம்மாதானே சொன்னாள். கொஞ்சம் பொறுத்துத்தான் போவேன்" என்று புருஷன் சொன்னதும், இவளுக்கு மூக்கு சிவக்கக் கோபம் தலைக்கேறியது.
" உன் அம்மாவிடம் நொட்டை பேச்சு கேட்டுக்கிட்டு வாழ்வதற்கு வேறு பெண் பார். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன்" என்று கிளம்பி விட்டாள்.
எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப்பேற்றுக்கு அப்பன் வீட்டுக்குப் போகிறவள்தான். ஆனால் செல்விக்குக் கொஞ்சம் முன் கோபம் அதிகம்தான். அப்பன் வீட்டில் ஒரே பெண் என்பதால் சுடு சொல் கேட்காமல் வளர்ந்தாள். புருஷன் வீட்டில் சுடு சொல் கேட்காமல் இருக்க முடியாதுதானே.
" இருட்டு நேரத்தில் போகாதேடி. இந்த முறை எல்லாம் உன் பின்னால் வருவேன் என்று நினைக்காதே. உனக்கு இதே வழக்கமாக போச்சு" என்று புருஷன் சொற்கள் இவளுக்கு இன்னும் வீம்பைக் கொடுத்தது. வெறும் கையை வீசிக் கொண்டு கிளம்பி விட்டாள். அப்பன் வீட்டுக்கு ஐந்து மைல் நடந்து போக வேண்டும். கொஞ்சம் தூரத்திற்குத் தான் மாட்டு வண்டி பாதை உண்டு, அதன் பிறகு ஒற்றையடிப் பாதை தான்.
இரண்டு மைல் நடித்திருப்பாள் கால் கடுக்க தொடங்கியது. நேரம் கழிந்தும் உதிக்கும் நிலா மெல்லக் கிழக்கே இருந்து மேலே ஏற தொடங்கியது. தூரத்தில் இருக்கும் கருப்பு சாமி பதி நிலா வெளிச்சம் தெரியத் தொடங்கியது. கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் உட்கார ஏதுவான பலகை கற்கள் உண்டு. வேகமாக நடந்தாள் செல்வி. கருப்பு சாமி பதி அருகிலிருந்த ஒரு கல்லில் அமர்ந்தாள். நிலா வெளிச்சத்தில் மீன் அரித்து வானம் ரம்மியமாகக் காட்சி தந்தது.
" கருப்பு சாமி ஐயனே என் அப்பன் வீட்டுக்குப் போகிற வரை எனக்குக் கால் வலிக்கக் கூடாது" வாய் வீட்டு சொல்லி கை எடுத்துக் கும்பிட்டாள் செல்வி. லேசான காற்று வீசத் தொடங்கியது. செல்வி ஒருவகையான இதத்தை உணர்ந்தாள். மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள் செல்வி.
" தாயி, யாரும்மா? இந்த நேரத்தில்?" என்ற ஆணின் குரல் செல்வியைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
"யார்?" நிலா ஒளியியல் வேட்டியுடன் நின்ற ஆண் மகனைப் பார்த்துக் கேட்டாள் செல்வி.
" என் பேரு கந்தன் தாயி. நீ எங்கே போற தாயி?" என்று அவளை நெருங்கி வந்து கேட்டான் கந்தன்.
" நான் என் அப்பன் வீட்டுக்குப் போகிறேன். கரட்டுப்பட்டிக்கு போகனும். நீ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டாள் செல்வி.
"தாயி நான் ஒரு நாடோடி. கிடைத்த வேலையைச் செய்வேன். கிடைத்த இடத்தில் தூங்குவேன். கருப்பு சாமி பதியில் அந்த பாறையில் படுத்திருந்தேன். நீங்கள் சாமி கும்பிட்டதைக் கேட்டு உங்களைக் கவனித்தேன். தனியாகப் போகிறீர்களே கூட யாரும் வரவில்லையா?" என்று கேட்டான் கந்தன்.
" இல்லை" ஒற்றை சொல் பதில் கொடுத்தாள் செல்வி.
"அப்படியானால் நான் உங்கள் ஊர் வரை துணைக்கு வருகிறேன்" என்றான் கந்தன்.
" உனக்கு எதற்குச் சிரமம். நானே போய்விடுவேன்" என்றாள் செல்வி.
" கிட்டத்தட்ட மூன்று மைல் இருக்கும் உங்கள் ஊருக்கு, நானும் துணைக்கு வருகிறேன். வாங்கப் போகலாம் " என்று அவன் முன்னே நடக்க , செல்வி வேறு வழியின்றி அவன் பின்னால் நடந்தாள்.
" ஏன் தாயி இந்நேரத்தில் அப்பன் வீட்டுக்கு போறீங்க?" என்று பேச்சுக் கொடுத்தான் கந்தன்.
" அது... புருஷன் கூட கொஞ்சம் பிணக்கு" என்று சொன்னால் செல்வி.
" குடும்பம் என்றால் சின்ன சின்ன சச்சரவு இருக்கத்தான் செய்யும். அதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் இப்படி பிணக்கு கொண்டு கிளம்பிவிடுவது சரி? என்று கேட்டான் கந்தன்.
செல்விக்கு என் பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் அமைதியாக நடந்தாள்.
" நான் என்ன சொல்றேனு உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அனுசரிப்பு செய்து வாழ்வதுதான் வாழ்க்கை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றெல்லாம் வாழ முடியாது தாயி. மனிதர்களை வெறும் பார்வையால் எடை போடும் உலகமாகிவிட்டது" என்று ஒரு விதமாகப் பேசினான் கந்தன்.
இப்போதும் செல்வி அமைதியாகவே நடந்தாள்.
" உங்களுக்கு நான் சொல்வது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றான் கந்தன்.
" அப்படியில்லை. நீங்கள் சொல்வது புரிகிறது " என்று அமைதியைக் கலைத்தாள் செல்வி.
" நாம் வேறு ஏதாவது பேசுவோம்" என்ற கந்தன். " வெகு நாளுக்கு முன்பு நான் ஒரு பண்ணையாரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த பண்ணையார் நல்ல மனிதர். சொன்ன சம்பளத்தில் குறைக்காமல் கொடுத்து விடுவார். ஒருநாள் அவர் போட்டிருந்த மோதிரம் ஒன்று காணாமல் போய்விட்டது. வேலையாட்கள் யாரேனும் திருடியிருக்க வாய்ப்புள்ளது என்று நான் உட்பட வேலை பார்த்த பதிமூன்று பேரையும் தரவாகச் சோதனை செய்தார்கள். ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. ஊரார் எங்களை அடித்து விசாரிக்கச் சொன்னார்கள். ஆனால் எங்கள் பண்ணையார் அப்படிச் செய்யவில்லை. எங்களை அவர் நம்பினார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் வேலை செய்தோம். ஒரு மாதம் கிழிந்திருக்கும். ஒரு நாள் பண்ணையார் மகன் பனைமரத்தில் நூங்கு வெட்ட ஏறினான். ஏறியவன் " அப்பா, உங்கள் மோதிரம் இங்கே காக்கை கூட்டில் இருக்கிறது" என்று கீழே நின்ற பண்ணையாரைப் பார்த்துக் கத்தினான். காக்கை ஏதோ உணவு என்று பண்ணையார் மோதிரத்தைக் கழற்றி வைத்த நேரத்தில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்தோம். எங்கள் பண்ணையார் எங்கள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை." என்ற கந்தன் கொஞ்சம் கதையை நிறுத்தினான்.
" அந்த பண்ணையார் இறந்தபிறகு எங்களுக்கு வேலை இல்லாமல் போனது. ஒவ்வொருத்தரும் அவர் அவர் வழியில் போனோம். சில நாட்கள் உணவு இல்லாமல் எல்லாம் இருந்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை கிடைக்கும். எதுவும் நிரந்தர வேலையாக அமையவில்லை. என் போதாத காலம் நான் அந்த கழுத்தணியை பறித்திருக்கக் கூடாது. ஆனால் ஒன்றைச் சொல்கிறேன் தாயி . நான் கெட்டவன் கிடையாது" கந்தன் பேசுவது செல்விக்கு விளங்கவில்லை.
"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை" என்றாள் செல்வி.
அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். " நான் ஒன்றும் கேட்டால் செய்வீர்களா தாயி?" என்றான் கந்தன்.
"என்ன?" என்றாள் செல்வி.
"கருப்பு சாமி பதியில் ஓரமாக ஒரு இடம் பார்த்து புது சாமி ஒன்றை நீங்கள் வைக்க வேண்டும். செய்வீர்களா" என்று கேட்டான் கந்தன்.
" எந்த சாமிக்கு?" என்று கேட்டாள் செல்வி.
" ஊர் வந்துவிட்டது தாயி. இனிமே நீங்கப் போய்விடுங்கள் " என்று பேச்சை மாற்றி நின்றான் கந்தன்.
" எந்த சாமிக்கு என்று கேட்டேனே?" என்றாள் செல்வி.
" கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் என்ன நடந்தது என்று உன் அம்மாவிடம் கேளுங்கள் அப்போது புரியும் " என்று சொன்னவன் திரும்பி நடந்தான். நிலாவின் ஒளியில் தேவன் போல அவன் நடந்தான்.
செல்வி தன் அப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். இரண்டு நாள் கழிந்தது. செல்வியின் அம்மா ,செல்விக்குத் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
" அம்மா , உன்னிடம் ஒன்று கேட்கவா?" என்றாள் செல்வி.
" என்னடி? " என்றாள் அம்மா.
" கருப்பு சாமி பதி அருகில் ஏதாவது நடந்ததா?" என்று கேட்டாள் செல்வி.
" பொதுவாகக் கேட்டால் என்னடி செல்ல?" என்றாள் அம்மா.
" இல்லமா , நான் வந்த இரவு கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் ஒரு ஆளைப் பார்த்தேன். அவர் எனக்குத் துணையாக ஊர் வரை வந்தார். கருப்பு சாமி பதியில் ஓரத்தில் ஒரு சாமியை வைக்கச் சொன்னார். அதனால்தான் கேட்டேன்" என்றாள் செல்வி.
" யாருடி துணைக்கு வந்தது?" என்று கேட்டாள் அம்மா.
" கந்தன் என்று சொன்னார்" என்றாள் செல்வி.
" கந்தனா? அம்மா வியந்து கேட்டாள்.
" கந்தனை உனக்குத் தெரியுமா?" என்றாள் செல்வி.
"அடியே மகளே. என் கழுத்திலிருந்து நகையைப் பறித்துக் கொண்டு போன நாடோடி பயல் தான் கந்தன். அவனைக் கருப்பு சாமி பதி அருகில்தான் ஊரார் பிடித்துக் கட்டி வைத்து அடித்தே கொன்றார்கள். அவன் எப்படி உனக்குத் துணையாக வர முடியும். இந்த நிகழ்வு எல்லாம் நீ பிறப்பதற்கு முன்பே நடந்தது" என்று வியந்து கேட்டாள் அம்மா.
செல்விக்கு என் சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கு எல்லாம் புரிந்தது. அடுத்த ஆறு மாதம் கழித்து ஆற்றில் கல் எடுத்து கந்தசாமி என்ற புது சாமியை , கருப்பு சாமி பதியில் வைத்தாள் செல்வி. ஊரார் இப்போது கருப்பு சாமியுடன் ,கந்தசாமியையும் கும்பிடுகிறார்கள்.



